உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு

கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு நடத்தினர்.

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா கடந்த 11ம்தேதி துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை வண்டாடும் பொட்டலில் சுவாமி, கஜமுக சூரன், சிங்கமுக சூரன், தொடர்ந்து மகாசூரனை சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து 9ம் திருநாளான நேற்று, வண்டாடும் பொட்டலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், திருமலைக்குமரன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பண்பொழி திருமலைக்கோயில் கந்தசஷ்டி விழாவில், பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு நடத்துவது சிறப்பாகும். அதன்படி தேரோட்டத்தை முன்னிட்டு, விரதம் இருந்த பக்தர்கள், தேருக்கு பின்னால் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு நடத்தினர். தேரோட்ட நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கோமதி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், கோயில் பணியாளர்கள், மண்டகபடிதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !