உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஷ்யா, கஜகஸ்தான், உக்கிரன் நாட்டு பக்தர்கள்

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஷ்யா, கஜகஸ்தான், உக்கிரன் நாட்டு பக்தர்கள்

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த வெளிநாட்டு பக்தர்கள் தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானத்திடம் அருளாசி பெற்றனர்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அலக்ஷி என்பவர் தலைமையில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்கிரன் நாடுகளை சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் நவகிரக ஆலயங்களில் தரிசனம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் தலைமையில் வெளிநாட்டு பக்தர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை அக்கினேஸ்வரர் கோவில், கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோவில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு வந்த வெளிநாட்டு பக்தர்கள் விநாயகர், செல்வ முத்துக்குமாரசுவாமி, வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்பாள் மற்றும் செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அப்போது அவர்கள் ஸ்லோகங்களை சத்தமாக சொல்லி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு எழுந்தருளிய தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வெளிநாட்டு பக்தர்கள் அருளாசி பெற்றனர். அப்போது வெளிநாட்டு பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பரிவட்டம் கட்டினார். தொடர்ந்து அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் விபூதி பிரசாதம் வழங்கியதுடன், வழிபாட்டு முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !