கருப்பண்ணசாமிக்கு பூஜை போட்டு விவசாயிகள் கறிவிருந்து வழங்கி மகிழ்ச்சி
திருப்புவனம்: திருப்புவனத்தில் சமுதாய கூடம் திறப்பு விழாவிற்கு விவசாயிகள் கறிவிருந்து வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருப்புவனம் கண்மாய்கரையில் அதிகமுடைய அய்யனார் மற்றும் கருப்பண்ண சாமி கோயில் அமைந்துள்ளது. திருப்புவனம் கண்மாய் கரை பாசன விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கும் போது அய்யனாரை பொங்கல் வைத்து வழிபட்டு தொடங்குவது வழக்கம், விவசாய பணிகள் எதனை செய்தாலும் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் விவசாய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கும் இடவசதி இன்றி சிரமப்பட்டதை அடுத்து சிவகங்கை கலெக்டராக இருந்த ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் நமக்கு நாமே திட்டத்தில் 17 லட்ச ரூபாயும், திருப்புவனம் பேரூராட்சி சார்பில் 30 லட்சம் ரூபாயும் ,மொத்தம் 47 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி சமுதாய கூடம் கட்ட உத்தரவிட்டார். அதன்படி கட்டி முடிக்கப்பட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா நடந்தது.விழாவில் திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், கவுன்சிலர்கள் அயோத்தி, பாரத்ராஜா உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். சமுதாய கூடம் திறப்பு விழாவை முன்னிட்டு அய்யனாருக்கும், கருப்பண்ணசாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பின் விவசாயிகள் சார்பாக அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் விருந்தில் பங்கேற்றனர்.