உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி அஷ்டமி; ஆனந்தவல்லி,சோமநாதர் கோவிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா

மார்கழி அஷ்டமி; ஆனந்தவல்லி,சோமநாதர் கோவிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் மார்கழி அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற சப்பர திருவிழாவில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடைபெற்றது.சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்று சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து ஜீவராசிகளுக்கு படியளப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி நடைபெற்ற மார்கழி அஷ்டமியை முன்னிட்டு இன்று அதிகாலை சுவாமிகளுக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் தனித்தனி ரிஷப வாகனங்களில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் பிரியா விடையுடன் எழுந்தருளினர். பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு வெளியே பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த சப்பரங்களுக்கு எழுந்தருளினர். சப்பரங்களுக்கு முன்னர் முருகன் வள்ளி தெய்வானையுடனும், விநாயகரும் சென்றனர்.இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை பாகபத் அக்ரஹாரம், மெயின் ரோடு, 4 ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர். அப்போது ஏராளமானோர் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விதமாக நெல், நவதானியங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை தூவியபடி வந்தனர். சுவாமி வீதிவுலாவின் போது ஏராளமானோர் தங்களது வீடுகளின் வாசல்களில் நின்று அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், டிராபிக் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், எஸ்.ஐ.,பூபதி ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !