உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஷ்மீர் சூரியனார், ராமர் கோவிலில் அயோத்தி கலசம் பிரதிஷ்டை

காஷ்மீர் சூரியனார், ராமர் கோவிலில் அயோத்தி கலசம் பிரதிஷ்டை

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் உள்ள பழங்கால மார்த்தாண்ட சூரியனார் கோவிலுக்கு, அயோத்தியில் இருந்து அனுப்பப்பட்ட கலசம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில், மார்த்தாண்ட சூரியனார் கோவில் உள்ளது. எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பழங்கால கோவிலில் மூலவர் சூரிய பகவான் சன்னிதியுடன், ராமர் சன்னிதியும் அமைந்துள்ளது. புராதன முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நாட்டில் உள்ள முக்கிய ராமர் கோவில்களுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கலசங்கள் அயோத்தியில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இதன்படி, ஜம்மு - காஷ்மீரில் உள்ள மார்த்தாண்ட சூரியனார் கோவிலுக்கு சமீபத்தில் கலசம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, அக்கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின் அங்குள்ள ராமர் சன்னிதியின் மீது, உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் முன்னிலையில், உள்ளூர் மக்களால் நேற்று அக்கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பக்தர்கள் கோவிலில் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !