உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்க்ஹில் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா; மனமுருகி வழிபட்ட பக்தர்கள்

எல்க்ஹில் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா; மனமுருகி வழிபட்ட பக்தர்கள்

ஊட்டி; ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரி உடனமர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், தைப்பூச திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு உபயதாரர்கள் சார்பில் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமுருக கிருத்திகை சங்கம் சார்பில், காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அலங்காரம், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை தொடர் பிரசாத வினியோகம் செய்யப்பட்டது. காலை, 11:45 மணியளவில் துவங்கிய திருத்தேர் ஊர்வலத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் ராஜ அலங்காரத்தில் முருக பெருமான் நகரில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா சென்றார். முன்னதாக, கலெக்டர் அருணா, மகிளா கோர்ட் நீதிபதி ஸ்ரீதரன், மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். படுகரின மக்களின் பஜனை மற்றும் நடனம் நடந்தது.விரதம் மேற்கொண்ட பக்தர்கள் முடி காணிக்கை கொடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்திருந்தனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசித்தனர்.

* மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. 11.00 மணிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் முருக பெருமானுக்கு செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவிலில், 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

* எம்.பாலாடா முருகன் கோவில் உட்பட கிராமங்களில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி முருகபெருமானுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை, பஜனை பாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !