சபரிமலைக்கு 400 பஸ்கள் கேரள அரசு இயக்குகிறது!
பாலக்காடு: சபரிமலை சீசன் துவங்கவுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக, 400 சிறப்பு பேருந்துகள், கேரள அரசு சார்பில் இயக்கப்படவுள்ளன. கேரள மாநில போக்குவரத்து துறை பொது மேலாளர், வேணுகோபால் கூறியதாவது: சபரிமலை மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை சீசனின் போது, பக்தர்களின் வசதிக்காக, 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், நீண்ட தூர பயணத்துக்காக, 300 பேருந்துகளும், பம்பைக்கு, 100 பேருந்துகளும் அடங்கும். பம்பை பேருந்து நிலையம், 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. நவம்பர், 13ம் தேதி இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும். திருவனந்தபுரம், கோட்டயம், கொட்டாரகரா, செங்கன்னூர், பத்தனம்திட்டா, எருமேலி, குமுளி மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, பம்பைக்கு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல், பம்பையில் இருந்து கோவை, தென்காசி, பழநி, சென்னை, பெங்களூரு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய ரயில் நிலையங்களுக்கும், பம்பையில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.