உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கிராமதேவதை வழிபாடுடன் துவக்கம்

குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கிராமதேவதை வழிபாடுடன் துவக்கம்

சென்னை; குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கிராமதேவதை வழிபாடுடன் துவங்கியது.

"பதியெங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலமர்ந்த பெருமானே" என்று அருணகிரிநாதர் வாக்கில் குடிகொண்டு, கூடிக்கும்பிட நாடி நல்வாழ்வு தருபவரே குன்றத்தூர் குமரன். போரூர், கோவூர், மாங்காடு, பூவிருந்தவல்லி, பல்லாவரம் ஆகிய ஊர்கள் சூழ நடுவில் தேவியர் இருவருடன், குயில் கூவ மயிலாடும் குன்றில் அமர்ந்து மகிழ்ந்து தன்னை அடியார்களுக்கு காட்சியளிக்கின்றார்.

திருப்போரூரில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் ஒரு முகூர்த்த காலம் இம்மலையில் தங்கி இருந்தார் என்பது வரலாறு. வடதிசையில் தணிகை நோக்கி அமர்ந்திருப்பதால் இவ்வூர் தென்தணிகை எனப்படுகிறது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்த முருகன் கோயில் இது ஒன்றே ஆகும். குன்றத்தூர் மலைக்கோயில் அமைதிக்கு உரிமைகொண்டது. அருளுக்குப் பெருமை கொண்டது. இத்தகைய பெருமைக்குரிய குன்றத்தூர் முருகப்பெருமானுக்கு பிரம்மோற்சவ விழா இன்று மாசி 1ல் 13ம் தேதி கிராமதேவதை வழிபாடுடன் துவங்கியது. மாசி மாதம் 12ம் தேதி 24-02-2024 வரை சனிக்கிழமை வரை சிறப்பாக நடைபெற உள்ளது.

விழா நிகழ்ச்சிகள்;

13-02-2024 செவ்வாய் காலை 10.30 மணிக்குமேல் கிராமதேவதை வழிபாடு
14-02-2024 புதன் – விநாயகர் உற்சவம் மூஷிக வாகனம்
15-02-2024 வியாழன் – கொடியேற்றம் தங்க மயில் வாகனம்
16-02-2024 வெள்ளி – சூரிய பிரபை, பச்சை மயில் வாகனம்
17-02-2024 சனி – கேடய உற்சவம், பூத வாகனம்
18-02-2024 ஞாயிறு – நாக வாகனம், சந்திர பிரபை
19-02-2024 திங்கள் – கேடய உற்சவம், திருக்கல்யாணம்
20-02-2024 செவ்வாய் – கேடயம் கந்தபொடி, யானை வாகனம்
21-02-2024 புதன் – இரத உற்சவம்
22-02-2024 வியாழன் – கேடய உற்சவம்
23-02-2024 வெள்ளி – கேடய உற்சவம், இந்திர விமானம்

24-02-2024 சனி – ஷண்முகர் தீர்த்தவாரி, கொடி இறக்கம் நடைபெறுகிறது. விழாவில் 

ஸ்ரீகன்யா செயல் அலுவலர், செந்தாமரை கண்ணன் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர் சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !