உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி சிவராத்திரி விழா; கொடிமரம் நடப்பட்டது

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி சிவராத்திரி விழா; கொடிமரம் நடப்பட்டது

தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா மார்ச் 8ல் துவங்குவதை முன்னிட்டு கொடிமரம் நடுவிழா கோலாகலமாக நடந்தது.

தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட பழமையான மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை, வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை. குடங்களில் நிறைந்து காணப்படும் நெய்யினை எறும்புகள் நெருங்குவதில்லை.இரவு, பகல் அணையாத நெய் விளக்கு எரிகின்றது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குலதெய்வமாக நினைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கொடிமரம் நடுவிழா: மார்ச் 8 முதல் மார்ச் 15 வரை 8 நாட்கள் திருவிழா நடக்கிறது. கொடிமரம் வழங்கும் பரம்பரை காவலர்கள் வரிசையில் ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் பாலமுருகன், கோயிலுக்கு 55 அடி உயரம் மூங்கில் கொடி மரம் கொடுத்தார். கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தி ஏராளமான பக்தர்கள் மத்தியில் கொடிமரம் நடப்பட்டது. மலர் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஏற்பாடுகளை செயல்அலுவலர் வேலுச்சாமி, பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ் பாண்டியன், கனகராஜ் பாண்டியன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !