ஸ்ரீநிவாசா கோவிந்தா.. திருப்பதியில் ஒருநாள் பிரம்மோற்சவம்.. பலவித அலங்காரம்.. பக்தர்களின் பரவசத்துடன் நிறைவு
திருமலை திருப்பதியில் நடைபெறும் விழாக்களில் நவராத்திரி நேரத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா வெகு பிரசித்தம். பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களிலும் மலையப்பசுவாமி ஒன்பது விதமான வாகனத்தில் ஒன்பது விதமான அலங்காரத்தில் மாடவீதியில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஒன்பது நாட்கள் திருமலையில் தங்கியிருந்து, மலையப்பசுவாமியின் ஒன்பது விதமான அலங்காரத்தை பார்க்க முடியாத பக்தர்கள், வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் ரதசப்தமியை முன்னிட்டு நடைபெறும் ஒருநாள் பிரம்மோற்சவ விழாவில் பங்குகொண்டு மலையப்பசுவாமியின் ஒன்பது விதமான அலங்காரத்தை தரிசிப்பர். அந்த ஒரு நாள் பிரம்மோற்சவ விழா ரதசப்தமியான நேற்று காலை 5 மணிக்கு துவங்கி கோலாகலமாக நடைபெற்றது. காலை 5 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும்,காலை 9 மணிமுதல் 10 மணிவரை சின்னசேஷ வாகனத்திலும், தொடர்ந்து கருட வாகனத்திலும்,அனுமன் வாகனத்திலும், சக்ரஸ்நான வாகனத்திலும் வலம் வந்தார், மேலும் கல்பவிருஷ வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும்,சர்வபூபாள வாகனத்திலும் சுவாமி வலம் வர கோலாகலமாக நிறைவடைந்தது. சுவாமி வலம்வரும் போது பெருமாளைப் போற்றும் பல்வேறு விதமான கலை நிகழ்வுகளை மாடவீதிகளில் கலைஞர்கள் நிகழ்த்தினர். விழாவினைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டிருந்தனர்.