காளஹஸ்தி சிவன் கோயிலில் சூரிய நாராயண ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம்
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று ரதசப்தமியை முன்னிட்டு ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் கோயில் வளாகத்தில் உள்ள ருத்ர பாதங்களுக்கு அருகில் ஸ்ரீ சாயா உஷாதேவி சமேத சூரிய நாராயண ஸ்வாமிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தீப தூபங்கள் சமர்ப்பிக்கப்பட்டு நெய்வேத்தியம் நடந்தது. காலை 8.00 மணிக்கு சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் சுவாமி அம்மையாருக்கு இரண்டாம் கால அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சூர்யபிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் சப்பரத்தில் ஞான பிரசூனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசுலு, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.