உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைவாழ் மக்களின் குலதெய்வ கோவிலில் 3வது முறையாக சிலை சேதம்

மலைவாழ் மக்களின் குலதெய்வ கோவிலில் 3வது முறையாக சிலை சேதம்

தொண்டாமுத்தூர்; நல்லூர் வயல்பதியில் உள்ள மலைவாழ் மக்களின் குலதெய்வ கோவிலில், மூன்றாவது முறையாக அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நல்லூர் வயல்பதியில் உள்ள மலைவாழ் மக்களின் குலதெய்வ கோவிலான சடையாண்டியப்பன் கோவில், வனப்பகுதியை ஒட்டி உள்ளது. சுமார், 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், சடையாண்டியப்பன், அம்மன், கன்னிமார், கருப்பராயன் உள்ளிட்ட தெய்வங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இக்கோவிலில் உள்ள அம்மன் சிலையை கடந்த, 2018ம் ஆண்டு சில மர்ம நபர்கள் திருடன் முயன்றுள்ளனர். அப்போது, மலைவாழ் மக்கள் அதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பின், கடந்த, 2022ம் ஆண்டு, இக்கோவிலில் இருந்த, 3 அடி உயரம் கொண்ட கருப்பராயன் சுவாமி சிலை திருடு போனது. இதுகுறித்தும் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், இக்கோவிலில் உள்ள 3½ அடி உயரமுள்ள அம்மன் சிலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றனர். அப்போது, இந்து அமைப்பினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சிலை சேதமானது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சடையாண்டியப்பன் கோவிலில் உள்ள அம்மன் சிலையை, மூன்றாவது முறையாக, மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் நேற்று கோவிலுக்கு சென்றனர். அதன்பின், மூன்றாவது முறையாக அம்மன் சிலையின் கை, கால் பாகங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ள மர்ம நபர்களை கைது செய்யக்கோரி, இந்து முன்னணி சார்பில், காருண்யா நகர் போலீசில் நேற்று புகார் அளித்தார். சிலையை சேதப்படுத்திய நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !