விஷ்ணுவின் பத்தாவது அவதாரம்; உலகின் முதல் கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
உத்தரபிரதேசம்: சம்பாலில் புனித தலமான கல்கிதாமுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
உலகின் முதல் கல்கி கோயிலான கல்கி தாம் புனித தலத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஸ்ரீ கல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது; இன்றைய இந்தியா வளர்ச்சியுடன் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஸ்ரீ கல்கி தாம் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு பாக்கியம். அழைப்பிற்காக ஆச்சார்யா பிரமோத் ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறினார் பிரதமர். ஐஞ்சோரா கம்போவில் வரவிருக்கும் கல்கி தாம் கருவறையில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் கர்ப்பக்கிரகம் இருக்கும் உலகின் முதல் கல்கி கோயிலாக இது இருக்கும் என்று ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கூறினார். சாஸ்திரங்களின்படி, பகவான் கல்கியின் இறுதி அவதாரம் சம்பாலில் வெளிப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கல்கி தாம் கட்ட வேண்டும் என்ற கனவு 18 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. அது தற்போது நனவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். விழாவில் நாடு முழுவதும் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்கள் மற்றும் துறவிகள் பங்கேற்றனர்.