உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை வரும் பிரதமர் மோடி இன்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார்

மதுரை வரும் பிரதமர் மோடி இன்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார்

மதுரை : பிரதமர் மோடி இன்று (பிப்.,27) மாலை மதுரையில் நடக்கும் சிறு, குறுந்தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்கிறார். இரவு மதுரையில் தங்குகிறார். நாளை காலை துாத்துக்குடி, திருநெல்வேலி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இன்று பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார்.

இரண்டு நாள் பயணமாக இன்று மதியம் தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை 234 தொகுதிகளில் மேற்கொண்ட பாதயாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் ஹெலிகாப்டரில் மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு 5:15 மணிக்கு மதுரை வீரபாஞ்சான் டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் நடக்கும் சிறு, குறுந்தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டிற்கு வருகிறார். அங்கு மத்திய பா.ஜ., அரசின் ஸ்டார்ட் அப் திட்டத்தால் தொழில் முனைவோரானவர்களை சந்திக்கிறார். மத்திய அரசின் மானியம், கடனுதவி, சலுகைகளால் சிறு,குறுந்தொழில்கள் அடைந்த வளர்ச்சி குறித்து தொழிலதிபர்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் இரவு 7:00 மணிக்கு சிவகங்கை ரோடு சந்திப்பு, ரிங் ரோடு வழியாக கப்பலுார், தனக்கன்குளம், திருநகர் வழியாக பசுமலை (தாஜ்)கேட் வே ஓட்டலுக்கு சென்று இரவு தங்குகிறார். இதன்காரணமாக ஒருமணி நேரத்திற்கு முன்பு பாதுகாப்பு கருதி ஆங்காங்கே போக்குவரத்து தடை செய்யப்படும்.


மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்

மதுரை வீரபாஞ்சானில் சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இரவு 7:00 மணிக்கு பிரதமர் மோடி, ஓட்டல் கேட்வே செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வுக்கு பின் இரவு 8:00 மணிக்கு பசுமலை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் ரோடு, தெற்குவெளிவீதி வழியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறார். அம்மன், சுவாமி சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு இரவு 9:15 மணிக்கு நடக்கும் பள்ளியறை பூஜையில் பங்கேற்கிறார்.இதையொட்டி மதுரை நகருக்குள்ளும் இன்று மாலை 6:00 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோயிலில் இருந்து புறப்படும் பிரதமர், வந்த வழியாகவே ஓட்டலுக்கு செல்கிறார்.

மதுரையில் தங்குவது இரண்டாவது முறை: பிரதமர் மோடி மதுரையில் இரவு தங்குவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே 2021 ஏப்.,2ல் மதுரையில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்நாளே வந்த பிரதமர், பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தரிசனம் செய்தார். பின்னர் இரவு பசுமலை கேட் வே ஓட்டலில் தங்கினார்.

மதுரையில் போக்குவரத்து மாற்றம்: மதுரை : மதுரைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி இன்று மதியம் 1:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.


திருநெல்வேலி செல்கிறார்

நாளை (பிப்.,28) அதிகாலை யோகா, மூச்சுப்பயிற்சிக்கு பின், காலை 8:00 மணியளவில் டிபனை முடித்துக்கொண்டு 8:15 மணிக்கு திருநகர், தனக்கன்குளம், கப்பலுார், ரிங் ரோடு வழியாக விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் துாத்துக்குடி செல்கிறார். அங்கு காலை 9:45 மணி முதல் 10:30 மணிக்குள் குலசேகரன்பட்டினம் ஏவுகணை தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருநெல்வேலி செல்கிறார். காலை 11:15 மணிக்கு அங்கு நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மதியம் 12:30 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். பல்லடம், திருநெல்வேலி பா.ஜ., பொதுக் கூட்டங்களில் வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் வருகையொட்டி மதுரை உட்பட தென்மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள்: திருச்சியில் இருந்து மதுரை வழியாக சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் மேலுார், திருவாதவூர் வழியாக பூவந்தி-, திருப்புவனம்,- முக்குளம்-, காரியாபட்டி வழியாகவும், தேனி, திண்டுக்கல், விருதுநகர் செல்லும் வாகனங்கள் மேலுார், அழகர்கோவில் ரோடு வழியாக அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல்-, மதுரை நகர், நாகமலை புதுக்கோட்டை பிரிவு வழியாகவும் செல்ல வேண்டும்.

* திருச்சியில் இருந்து மதுரை வர வேண்டிய வாகனங்கள் ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பு வழியாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை, உத்தங்குடி- வழியாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு வரவேண்டும். துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பு, மதுரை நகர், நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை சந்திப்பு-, செக்கானுாரணி, திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும். சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பு, திருமோகூர் ரோடு, திருவாதவூர்-, பூவந்தி வழியாக செல்ல வேண்டும்.

சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி, திருவாதவூர்,- ஒத்தக்கடை,- மேலுார் வழியாகவும், துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம்-, முக்குளம்-, காரியாபட்டி வழியாகவும் செல்ல வேண்டும்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சக்குடி பாலம் வழியாக பூவந்தி-, திருவாதவூர்-, ஒத்தக்கடை வழியாகவும், துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் திருப்புவனம் நான்கு வழிச்சாலை வழியாக திருப்புவனம்-, முக்குளம்-, காரியாபட்டி வழியாகவும் செல்ல வேண்டும்.

துாத்துக்குடி: துாத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் முக்குளம் சந்திப்பு வழியாக முக்குளம்-, திருப்புவனம்-, பூவந்தி,- ஒத்தக்கடை-, மேலுார் வழியாகவும், வலையங்குளம் வழியாக நெடுங்குளம் ரோடு, திருப்புவனம்-, பூவந்தி, திருவாதவூர்-, மேலுார் வழியாகவும், திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் காரியாபட்டி சந்திப்பு,மருதங்குடி,- கள்ளிக்குடி-, திருமங்கலம் (சோழவந்தான் ரோடு சந்திப்பு)-, செக்கானுாரணி,- சோழவந்தான், வாடிப்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

திருநெல்வேலி, விருதுநகர்: திருநெல்வேலி, விருதுநகரில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் திருமங்கலம் வழியாக சோழவந்தான் ரோடு சந்திப்பு- செக்கானுாரணி-, நாகமலை புதுக்கோட்டை-, அச்சம்பத்து வழியாகவும், திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் திருமங்கலம் வழியாக சோழவந்தான் ரோடு, செக்கானுாரணி-, வாடிப்பட்டிவழியாகவும் செல்ல வேண்டும்.

* ராஜபாளையத்தில் இருந்து மதுரை, திருச்சி, திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் டி.கல்லுப்பட்டி வழியாக பேரையூர்-, உசிலம்பட்டி- விருவீடு வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கும், உசிலம்பட்டிலிருந்து செக்கானுாரணி,- நாகமலை புதுக்கோட்டை வழியாகவும் செல்ல வேண்டும்.

தேனி, திண்டுக்கல்: * தேனியில் இருந்து துாத்துக்குடி-, திருநெல்வேலி- செல்லும் வாகனங்கள் செக்கானுாரணி தேவர் சிலை சந்திப்பு, திருமங்கலம் (சோழவந்தான் ரோடு சந்திப்பு)- விருதுநகர் வழியாகவும், திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை சந்திப்பு வழியாக செக்கானுாரணி தேவர் சிலை-, திருமங்கலம் (சோழவந்தான் ரோடு சந்திப்பு)- வழியாக செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !