உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றத்தின் போது முறிந்து விழுந்த கொடிமரம்

திருநள்ளாறு கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றத்தின் போது முறிந்து விழுந்த கொடிமரம்

காரைக்கால் : திருநள்ளாறு நளநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றத்தின் போது, கொடிமரம் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் புகழ் பெற்ற நளநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா ஒருவாரத்திற்கு விமர்சையாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று பிரமோற்சவ கொடியேற்று விழா நடந்தது.காலை கொடியேற்றத்திற்கு முன்பு, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கொடிமரத்தை அலங்கரித்து, கயிறு மூலம் கொடியேற்றம் நடந்தது. அப்போது, திடீரென கொடிமரத்தின் மேல்பகுதி உடைந்து விழுந்தது. கோவிவின் மேல் தளத்தில் விழுந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்து, புதிய கொடிமர கம்பம் ஏற்பாடு செய்து, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொடிமரம் உடைந்தது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவ துவக்க நிகழ்வின்போது கொடி மரம் முறிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !