மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் தீமிதித்து நேர்த்தி கடன்
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த 8ம் தேதி மகாசிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. 5ம் நாள் விழாவாக நேற்று மாலை மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் தீமிதி விழா நடந்தது. இதை முன்னிட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்தனர். மாலை 4.30 மணிக்கு அக்கினி குளத்தில் இருந்து உற்சவர் அங்காளம்மனை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு ஊஞ்சல் மண்டபம் முன் அமைத்திருந்த அக்கினி குண்டம் முன்பு அம்மன் எழுந்தருளியதும். சேலம் மாவட்டம் ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமகுரு ஆதினம் முதலில் தீக்குண்டம் இறங்கினார்.
அவரை, தொடர்ந்து கோவில் பூசாரிகளும், காப்பு கட்டி விரதமிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இரவு 9 மணி வரை தீ மிதித்து நேர்ந்தி கடன்இறங்கினர். இதில் சேலம், ஈரோடு, தர்மபுரி பகுதியை சேர்ந்த பெண் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து அதிக அளவில் தீக்குண்டம் இறங்கினர். முன்னதாக அம்மன் ஊர்வலமாக வந்த போது பக்தர்கள் அலகு குத்தியும், பரவை காவடி மூலம் ஆகயாமார்க்கமாகவும் அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ், அறங்காவலர்கள் மதியழகன், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், கண்காணிப்பாளர் வேலு, மேலாளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். எஸ்.பி., தீபக் சிவாச் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.