ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கல்கள் சேதம் : பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடுகின்றனர். பக்தர்கள் வசதிக்காக 3 ஆண்டுக்கு முன்பு அக்னி தீர்த்த கடற்கரையில் மத்திய சுற்றுலா நிதியில் ரூ. 50 லட்சத்தில் சிமெண்ட் சிலாப் கல்கள் அமைத்து மராமத்து செய்தனர். ஆனால் கடலில் எழுந்த ராட்சத அலையில் சிலாப் கல்கள் சேதமடைந்து தாறுமாறாக கிடக்கிறது. இதனால் நீராட வரும் பக்தர்கள் கல்லில் இடறி விழுந்து காயமடைகின்றனர். எனவே பக்தர்கள் நலம் காக்க சேதமடைந்த கல்களை அகற்றிட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.