ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை; உடல்நிலையில் முன்னேற்றம்
புதுடில்லி, பிரபல ஆன்மிக குருவான ஜக்கி வாசுதேவுக்கு அவசரமாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரும், பிரபல ஆன்மிக குருவுமான ஜக்கி வாசுதேவ், 66, சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகிறார். கடந்த நான்கு வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவர், அதை பொருட்படுத்தாது கடந்த 8ல் நடந்த மஹா சிவராத்திரி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் பங்கேற்றார். இருப்பினும், தொடர்ந்து தலைவலி அதிகரித்ததை அடுத்து, அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் வாசுதேவுக்கு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரின் மண்டை ஓட்டில் ரத்தக் கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து சமூக செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த அவருக்கு, கடந்த 17ம் தேதி சுயநினைவு குறைந்து காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, புதுடில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு, பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வினித் சூரி தலைமையிலான நான்கு பேர் அடங்கிய குழு, கடந்த 17ல் அவசர மூளை அறுவை சிகிச்சை செய்தனர். இதில், மண்டை ஓட்டில் ஏற்பட்ட ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டது. இரண்டு நாட்களாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடல்நிலையில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.