பரக்காட்டு பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா கோலாகலம்
பாலக்காடு: காவச்சேரி பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் காவச்சேரியில் உள்ளது பரக்காட்டு பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் பங்குனி மாதம் பூரம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. காலை கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பித்தது. தொடர்ந்து அம்மனுக்கு நிர்மால்லிய பூஜை, உஷ பூஜை என பல்வேறு சிறப்பு பூஜைகள் கோவில் தந்திரி ஏறன்னூர் மனை பிரசாத் நம்பூதிரி, மேல்சாந்தி ராமசந்திர பட்டு ஆகியோரின் தலைமையில் நடந்தன. தொடர்ந்து காவச்சேரி பிராமண சமூகம் சார்பில் வேத பாராயணம் நடந்தது. தொடர்ந்து அம்மன் பஞ்ச வாத்தியம் முழங்க மூலஸ்தானத்தில் இருந்து யானை மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பஞ்ச வாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்து மணி குடைகள் சூடிய 9 யானைகளின் அணிவகுப்பு நடந்தது. இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். திருவிழாவை ஒட்டி இரவு நடந்த பிரம்மாண்டமான வான வேடிக்கையை ஏராளமானார் கண்டு மகிழ்ந்தனர்.