உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையநல்லூர் கரடி மாடசாமி கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

கடையநல்லூர் கரடி மாடசாமி கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

கடையநல்லூர்: கடையநல்லூர் கரடி மாடசாமி கோயில் தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடை விழாவை முன்னிட்டு இன்று (31ம் தேதி) மதியம் அன்னதானம் நடக்கிறது. கடையநல்லூரில் லட்சுமி வராக மூர்த்தி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் விஷ்ணு பகவானின் வராக அவதாரமாக சுவாமி அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கொடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொடை விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மஞ்சண காப்பு அலங்காரம், காய்கறி அலங்காரம், அன்னாபிஷேகம், லட்டு அலங்காரம், பழ அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பவுர்ணமி பூஜை, புஷ்பாஞ்சலி நடந்தது. கொடை விழாவான நேற்று மாலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தீர்த்தக்குட ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து கரடி மாடசாமிக்கு சிறப்பு பூஜை, சாம பூஜை நடந்தது. இன்று (31ம் தேதி) காலை 8 மணிக்கு பொங்கல் அழைப்பும், தொடர்ந்து பொங்கலிடும் வைபவம் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீகரடி சித்தர் வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !