உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களூரு கோவில் திருவிழா; ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தம் எறிந்து நேர்த்தி கடன்

மங்களூரு கோவில் திருவிழா; ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தம் எறிந்து நேர்த்தி கடன்

தட்சிண கன்னடா : மங்களூரு கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை எறிந்து, வினோதமான முறையில் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் கட்டீல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நடுவில் நந்தினி என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் நடுவில் 1,000 ஆண்டுகள் பழமையான துர்கா பரமேஸ்வரி கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா ஏப்., 13ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

தீக்காயம் ஏற்படாது; இங்கு பல நுாற்றாண்டுகளாக, வித்தியாசமான முறையில் விழா நடந்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்கள், இரு குழுவாக பிரிந்து கொள்வர். பின், ஒரு குழுவினர் மீது மற்றொரு குழுவினர் மாறி மாறி தீப்பந்தங்களை எறிவர். இதை பார்க்கும் போது ஏதோ கலவரம் நடப்பது போன்று இருக்கும். அதுவும், இரவில் பார்ப்பதற்கு மிகவும் திகிலாக இருக்கும். ஆனால் தீப்பந்தங்களை, ஒருவர் மீது ஒருவர் வீசும் போது, தங்களுக்கு நல்லது நடக்கும் எனவும், யாருக்கும் தீக்காயம் ஏற்படாது என்றும், அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். இந்தாண்டு வழக்கம் போல் துர்கா பரமேஸ்வரியை வழிபட்ட பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு காவி வேஷ்டி அணிந்து, கோவில் முன் உள்ள மைதானத்தில் திரண்டனர்.


தீப்பிழம்பு; துர்கா பரமேஸ்வரிக்கு நடந்த சிறப்பு வழிபாட்டுக்கு பின், பந்தங்களை பற்ற வைத்து, ஒருவர் மீது ஒருவர் வீசினர். அந்த பகுதியே தீப்பிழம்பு சிதறியது போன்று காட்சி அளித்தது. ஆனாலும் யாருக்கும் சிறு தீக்காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !