பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா விமரிசை
ADDED :559 days ago
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது, ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் சிவபெருமான் உலகை காக்க வேண்டி ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதிதேவி மடியில் உறங்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது சிறப்பு. மேலும், இங்கு தாம்பத்ய தட்சணாமூர்த்தி தன் மனைவி கவுரியை அணைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது மற்றொரு சிறப்பு. நேற்று மாலை 5:19 மணிக்கு குருபகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதையொட்டி, இக்கோவில் வளாகத்தில், 9 அடி உயரத்தில் குருபகவான் கஜ வாகனத்தில் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இங்கு விசேஷ ஹோமம், அர்ச்சனை, பரிகார சங்கல்பம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் ப்ரீத்தி பூஜை செய்து வழிபட்டனர்.