உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவகிரக கோட்டையில் குரு பெயர்ச்சி லட்சாசனை; காமாட்சிபுரம் ஆதீனம் வழிபாடு

நவகிரக கோட்டையில் குரு பெயர்ச்சி லட்சாசனை; காமாட்சிபுரம் ஆதீனம் வழிபாடு

பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த குரு பெயர்ச்சி விழாவில், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் தெரிவித்தார்.

பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், குரு பெயர்ச்சி லட்சாசனை விழா மற்றும் 1,008 தீர்த்த கலச அபிஷேக விழா ஆகியவை நடந்தன. விழாவை துவக்கி வைத்து கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது: குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை என்பார்கள். அதுபோல், 12 வயது முதல் எனது குருவான சிவலிங்கேஸ்வரரின் கைகளைப் பிடித்தபடியே சேவை செய்து வந்தேன். காவி உடை அணிவது என்பது அவ்வளவு எளிதல்ல. எந்த எதிர்பார்ப்பும் இன்றி குருவுக்கு சேவை செய்து வந்ததன் பலனாக, இன்று, அவர் விட்டுச் சென்ற பணிகளை நான் செய்யும் பாக்கியம் கிடைத்துள்ளது. சன்னியாசிகள் கால் தொட்டு வழங்கினால் பாவங்கள் நீங்கும். பெண்களின் பெயரில்தான் பெரும்பாலான ஆறுகள் ஓடுகின்றன. இன்னொரு மகள் என்பதால், வீட்டுக்கு வந்த பெண்ணை மருமகள் என்கின்றனர். ஆனால், இன்று பெரும்பாலான இடங்களில் அப்படி இல்லை. சொத்து, பணத்தின் மீதுதான் இன்று அதிக ஆசை உள்ளது.

உலகில் யார் நல்லவர் கெட்டவர் என்றே தெரிவதில்லை. கடவுள் தான் அனைவருக்கும் துணை இருந்து காக்க வேண்டும். நாம் சாப்பிடும் விருந்து சிறிது நேரத்தில் ஜீரணம் ஆகிவிடும். ஆனால் அருள் விருந்து என்பது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நமக்குள் இருக்கும். மனிதனும் ஆத்மாவும் ஒன்றே. மமதை இதை மறைக்கிறது. நமக்குள் உள்ள மமதை மறையும் போது ஆத்மா வெளிப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ஏப்., 30 அன்று வாஸ்து சாந்தி நிகழ்வுகள் குரு பெயர்ச்சி விழா துவங்கியது. அன்று மாலை, விநாயகர் வேள்வி, சரஸ்வதி, மகாலட்சுமி, துர்கா பூஜை, முதல் கால வேள்வி, குருபகவான் மூலமந்திர வேள்வி ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம், இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்விகளை தொடர்ந்து, மாலை, 5.15 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து, 1,008 தீர்த்த கலச அபிஷேகம், குரு பகவான் திருவீதி உலா நடந்தது. நேற்று, காலை 7.00 மணிக்கு நான்காம் கால வேள்வி, 108 சங்காபிஷேகம் ஆகியவை நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் குரு பகவானும், அம்மையப்பராக சிவபெருமானும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !