தூத்துக்குடி,கோவில்பட்டியில் கல்லறை திருநாள் வழிபாடு
கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் கல்லறை திருநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. உலக கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறைகளில் கல்லறை திருநாளும் ஒன்றாகும். பைபிளில் இறந்தோர் ஒருநாள் உயிர்த்து எழுந்து நீதித்தீர்ப்பிற்கு உள்ளாவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்படி இறந்தோர் அனைவரும் கடவுளுடன் ஐக்கியமாகவும், அவருடன் விண்ணுலகில் வாழவும், அதன் வழியாக மண்ணுலகில் வாழும் மக்களின் நலனுக்காக கடவுளிடம் பரிந்துரை செய்யவும் வேண்டுகின்றனர். இவ்வாறு வேண்டினால் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு, பரலோக வாழ்வை அடைவர் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் தான் கிறிஸ்தவர்கள் அனைவரும் கல்லறை திருநாளன்று இறந்தோரை அடக்கம் செய்த கல்லறை தோட்டத்திற்கு சென்று இறந்த ஆன்மாக்கள் இறைவனில் அமைதி கொள்ள வேண்டுமென சிறப்பு வழிபாடுகள் நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் கல்லறை திருநாளன்று யாரும் நினைக்க ஆளில்லாத மரித்த ஆன்மாக்களை நினைத்து அவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வது மிகவும் முக்கியமானதாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி தூய வளனார் தேவாலயத்தில் நடந்த கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடுகளில் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கல்லறை தோட்டத்திற்கு சென்று ஜெபம், கல்லறை மந்திரித்தல், இறந்தவர்கள் பாவமன்னிப்பு பெற்று இறைவனில் சாந்தியடைய வேண்டும் வழிபாடுகள் நடந்தது. சிறப்பு வழிபாடுகளை தூய வளனார் தேவாலய பங்குத்தந்தை அன்னாசாமி அடிகளார், உதவி பங்குத்தந்தை வில்சன் அடிகளார் ஆகியோர் செய்தனர். இதேபோல் கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலயத்தில் நடந்த கல்லறை திருநாள் சிறப்பு வழிபாட்டில் ஆலயத்தில் வடபுறமுள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறைகள் மந்திரிப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து கிழக்கு பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை மந்திரித்தல் மற்றும் திருப்பலி நடந்தது. வழிபாடுகளை கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய பங்குத்தந்தை விசுவாச ஆரோக்கியராஜ் அடிகளார் நடத்தினார். தூத்துக்குடி, கோரம்பளளம், அந்தோணியார்புரம், மறவன்மடம், திரவியபுரம் புதுக்கோட்டை மடத்தூர், ஆகிய பகுதிகளில் ஏராளமான கிறிஸ்வர்கள் கல்லறை திருநாளை முன்னிட்டு கல்லறைக்கு சென்று மெழுகுவர்த்தியேற்றி வழிபாடு நடத்தினர்.