156 இதய நோயாளிகளுக்கு சங்கர மடம் ரூ.1.70 கோடி நிதியுதவி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஒரு அங்கமாக திகழும், ஸ்ரீசங்கரா ஹார்ட் பவுண்டேஷன் சார்பில், இதய நோயாளிகள் 156 பேருக்கு, 1.70 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என சங்கர மடம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீசங்கரா ஹார்ட் பவுண்டேஷன் அமைப்பு சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தலைவராக ஜெ.எஸ்.என்.மூர்த்தி செயல்பட்டு வருகிறார். இவர் ஹார்ட் பவுண்டேஷன் அமைப்பின் கடந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை, காஞ்சி காமகோடி பீடாதிபதி, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் நேற்று சமர்ப்பித்தார். அதை விஜயேந்திரர் வெளியிட்டார். இந்த அமைப்பு வாயிலாக ஏழை, எளிய மக்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளபடி 156 இதய நோயாளிகளுக்கு ரூ.1.70 கோடி வரை நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் இதய நோயாளிகளும் இதில் அடங்குவர். இதேபோல, மணிப்பூரில் 30 இதய நோயாளிகளுக்கு தேவையான அறுவை சிகிச்சை இலவசமாக செய்து கொடுக்கவும், ஆலோசனை, மருந்து உள்ளிட்டவை வழங்கவும் ஸ்ரீசங்கரா ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.