பக்தர்கள் சூழ ஆடி அசைந்து வந்த தேர் நரசிங்க பெருமாள் கோவிலில் விமரிசை
மறைமலைநகர் : சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலையில், அகோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.
பல்லவர் கால குடைவரை கோவிலான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவத்திற்கு, கடந்த 13ம் தேதி கொடி ஏற்றப்பட்டது. கடந்த ஆறு நாட்களாக சூர்யபிரபை, சந்திரபிரபை, யாளி வாகனம், யானை வாகனத்தில் உற்சவர் பிரகலாத வரதர் நான்கு மாட வீதிகளில், வாண வேடிக்கைகளுடன் வலம் வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. அதிகாலை உற்சவர் பிரகலாத வரதர், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 6:30 மணிக்கு, ஸ்வாமி தேரில் எழுந்தருளினார். 7:00 மணிக்கு தேரின் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து சென்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என கோஷம் எழுப்பி பக்தி பரவசமடைந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேர், காலை 11:00 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 3,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு, உள்ளூர் மக்கள் மற்றும் முஸ்லிம்கள் சார்பில் பல இடங்களில் மோர், ரஸ்னா மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.