திருவொற்றியூர், பெருமாள் கோவில்களில் தேரோட்டம் விமரிசை
திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம், 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை, 22ம் தேதி நடந்தது. அப்போது, சப்பரத்தின் தண்டு உடைந்து, உற்சவர் சிலை கீழே சரிந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, மாற்று தண்டு கொண்டு வரப்பட்டு, கருடசேவையானது நடந்தது. இந்நிலையில் மற்றொரு முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட, 25 அடி உயர திருத்தேரில், ஸ்ரீதேவி - பூதேவி உற்சவர் பவள வண்ண பெருமாள், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா என, விண்ணதிர முழங்கியபடி, தேரை வடம் பிடித்தனர். பின், தேரானது, நான்கு மாடவீதிகளில் ஆடி அசைந்து வலம் வந்து, மதியம் நிலையை அடைந்தது. அதேபோல், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தில் நேற்று, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 2:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டார். 2:50 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு, பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 6:10 மணிக்கு, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, வரதா, கோவிந்தா, அத்திவரதா, பரந்தாமா என, கரகோஷங்களுடன் வடம் பிடித்து இழுக்க, திரளான பக்தர்களின் வெள்ளத்திற்கு இடையே, தேர் அசைந்து ஆடியபடிபடியே புறப்பட்டது. காந்தி சாலை, மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட சந்திப்பு பகுதியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து, வரதராஜரை வழிபட்டனர். விடுமுறை தினம் மற்றும் முகூர்த்த தினமாக இருந்ததால், தேரோடும் வீதி முழுதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.