வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருத்தேர் வெள்ளோட்டம்
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நூதன ஆண்டாள் திருத்தேர் வெள்ளோட்ட விழா நடந்தது.
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டாள் நின்ற திருக்கோலத்தில் தனிச்சன்னதியில் அருள் பாலிக்கிறார். இங்கு ஆண்டாள் ஆடிப்பூர தேர் திருவிழா குழு சார்பில் நூதன தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கியது. அப்போது அனுக்கை, கும்ப பிரதிஷ்டை நடந்து, ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. பின்னர் கடம் புறப்பாடாகி தேரில் எழுந்தருளி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் தேரினை ரத வீதிகளில் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தமிழ் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பூரத்தன்று ஆண்டாள், வரதராஜ பெருமாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தேரானது இரண்டு குதிரைகள் பூட்டிய நிலையில், அழகிய விமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழாவில் எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள், திருவிழா குழுவினர் கலந்து கொண்டனர்.