திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவன மகா கும்பாபிஷேகம்
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில், ராஜகோபுரம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் அடுத்த குடமுருட்டி அருகே, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனம் அமைந்துள்ளது. இங்குள்ள அதிஷ்டான அருளாலயம், மணிமண்டபம், மூர்த்திகள் சன்னிதி, ராஜகோபுரம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டு, 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 12ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. தினசரி உபன்யாசம், பஜனைகள் நடந்த நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, நவாவரண பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி 7:00 மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் மூர்த்திகளின் மூலக்கலசங்களுக்கு வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
சன்முனிந்திர சிரோரத்னம், ஞானானந்த குரும் பஜே என்ற வாக்கிற்கு ஏற்ப, ஞானிகளே சிரமேற்ற ரத்தினமாக கொண்டாடப்படும் சத்குருநாதரின் தபோவன கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியின் அனுக்கிரகத்தை பெற்றதாகவே பக்தர்கள் கருதி, ஸ்ரீ ஞானானந்தா கோஷத்துடன் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் செய்திருந்தனர். சிங்கப்பூர் பக்தர் வெங்கடேஷ் நாராயணசுவாமி உள்ளிட்ட பக்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.