திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
வானுார்; சஞ்சீவி நகர் திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுச்சேரி அடுத்த சஞ்சீவி நகரில் உள்ள சஞ்சீவி விநாயகர், செங்கழுநீர் அம்மன், திரவுபதியம்மன், கெங்கையம்மன் கோவில்களின் பிரம்மோற்சவ விழா, கடந்த வாரம் துவங்கியது. இதையொட்டி, கடந்த 11 ம்தேதி மணிக்கு, கெங்கை அம்மனுக்கும், மாரியம்மனுக்கும் கூழ் வார்த்தலும், அன்று மாலை செடல் உற்சவம் நடந்தது. 14ம் தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணமும், 15ம் தேதி இரவு கிருஷ்ணன் ரதம் செலுத்த அர்ச்சுனன், திரவுபதியம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு அர்ச்சுனன் தபசு ஏறுதலும் நடந்தது. அன்றிரவு 10:00 மணிக்கு கிருஷ்ணன், அர்ச்சுனன், திரவுபதியம்மன் வீதியுலா மற்றும் அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு 8:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.