அம்மனின் சேலைகள் ஏலம்; ஆர்வமுடன் அள்ளிச் சென்ற பெண் பக்தர்கள்
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியான நேற்று அம்மனின் சேலைகள் ஏலம் விடப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்பு விழாக்கள் நடந்து வருகிறது. ஆடி வெள்ளியான நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததோடு பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாதம்தோறும் 2வது மற்றும் 4 வது வெள்ளியன்று கோயில் நிர்வாகம் சார்பில் முத்துமாரியம்மனுக்கு சாத்தப்பட்ட சேலைகள் ஏலம் விடப்படும். இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வர். நேற்று ஆடி வெள்ளி என்பதால், குறைந்த விலையில் அம்மனின் சேலைகள் ஏலம் விடப்பட்டது. இதில் செயல் அலுவலர் விஸ்வநாத், ஆய்வாளர் முத்துமுருகன் கணக்கர் சரவணன் மற்றும் பணியாளர்கள் ஏலம் நடத்தினர். ரூ.100 முதல் ரூ.400 வரைக்கு ஏலம் விடப்பட்ட சேலையை ஏழை எளிய மக்களும், பக்தர்களும் ஆர்வமுடன் வாங்கினர். 200க்கும் மேற்பட்ட புடவைகள் ரூ.55 ஆயிரத்திற்கு விற்பனையானது.