காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா; ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம்
காரமடை; வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்களில் பெண்மைக்கு பெயர் சேர்க்கும் விதமாக ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தார். இவரது ஜென்ம நட்சத்திரமான ஆடி மாத பூரம் வைணவ திருத்தலங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொங்கு நாட்டில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பூரம் தினத்தில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலசந்தி பூஜை முடிந்து ஆண்டாள் சன்னதியில் விஸ்வக்க்ஷேனர் ஆவாகனம் புண்யாஜனம், கலச ஆவாஹனம், மூலவர் மற்றும் உற்சவர் ஆண்டாள் தாயாருக்கு நெய் நெய் தேன் பால் தயிர் இளநீர் கனி வர்க்கம் மஞ்சள் சந்தனம் வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைகளால் ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. பட்டுடுத்தி வெள்ளி சிம்மாசனத்தில் வெண்பட்டு குடை சூழ மேலதாளம் முழங்க ரங்க மண்டபத்தை அடைந்தார் உற்சவர் ஆண்டாள் தாயார். ஸ்ரீ ரங்கநாதரிடம் இருந்து மாலை பரிவட்டம் சடாரி மரியாதை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்தலத்தார்கள் வியாத வியாச ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் பெருமாள் முன் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில் இருந்து நாச்சியார் திருமொழி பாசுரங்கள் சேவித்தனர். மீண்டும் சடாரி மரியாதை உற்சவர் ஆண்டாள் தாயாருக்கு சாத்தப்பட்டு தாயாரிடம் இருந்து சூடிக்கொடுத்த மாலை ரங்கநாதருக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருக்கோவில் வலம் வந்து ஆண்டாள் சன்னதியை அடைந்தார். தொடர்ந்து உச்சக்கால பூஜை சாற்றுமறை பிரசாத விநியோகங்கள் செய்யப்பட்டு வைபவம் நிறைவடைந்தது. இதில் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் திருக்கோவில் அதிகாரிகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.