சோமநாதபுரத்தில் லட்சுமி ஹயக்ரீவர், கருப்பண்ணசுவாமி பிரதிஷ்டை
பரமக்குடி; பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் செல்வவிநாயகர் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் கருப்பண சுவாமி நூதன விக்கிரக பிரதிஷ்டை கோலாகலமாக நடந்தது.
சோமநாதபுரம் சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இங்கு லட்சுமி ஹயக்ரீவர் பஞ்சலோக விக்ரகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி நூதன விக்ரகம் பிரதிஷ்டை வைபவம் நடந்தது. இதனையொட்டி ஆக., 18 காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்து, செல்வ விநாயகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை 4:00 மணிக்கு நூதன விக்ரகங்கள் வெள்ளோட்டம், வாஸ்து பூஜை நடத்தப்பட்டு, முதல் கால ஹோமம் பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இன்று காலை 7:00 மணிக்கு 2ம் கால யாக பூஜைகள் துவங்கி, மகாபூர்ணாகுதிக்கு பின் கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தனர். தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மேல் நூதன விக்ரகங்களுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை செல்வவிநாயகர் கோயில் நிர்வாகிகள் செய்தனர்.