கோவை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சாகம்
கோவை; கோவையில் உள்ள ஜெகன்நாதர் கோவிலில், நேற்று கிருஷ்ணஜெயந்தி விழா துவங்கியது. வரும் 27 வரை நடக்கிறது.
கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகம் அருகே, ஜெகன்நாதர் கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று துவங்கியது. குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, மாறுவேட போட்டி, வண்ணம் தீட்டுதல், பாட்டுப்போட்டி, நாடகம், பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை பரிசளிப்பு விழா நடக்கிறது. இளைஞர்களுக்கான விவாத நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது. ஹரே கிருஷ்ணா அமைப்பின், பக்தி விநோத சுவாமி மகராஜ் தலைமையில் வல்லுநர் குழுவினர், இளைஞர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்றனர். நாளை அதிகாலை 4:15 மணி முதல் நள்ளிரவு வரை சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம், கிருஷ்ண லீலை சொற்பொழிவுகள், பாலகோபாலருக்கு அபிஷேகம், அஷ்டோத்திர மகா கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் ராதாகிருஷ்ணருக்கு வழிபாடுகள், கோபூஜை, பகவான் ஜெகன்நாதருக்கு தீபாராதனை, கலைநிகழ்ச்சிகள், மற்றும் அன்னதானம் நடக்கின்றன.