முருகா கோஷத்துடன் கோலாகலமாக துவங்கியது முத்தமிழ் முருகன் மாநாடு; இன்று இரண்டாம் நாள்
பழனி; திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.
பழனியாண்டவர் கலை கல்லுாரியில் இரண்டு நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று துவங்கியது. ஐந்து ஆய்வகங்கள், 1,300 ஆய்வு கட்டுரைகள், முப்பரிமாண முருகன் பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி இடம் பெற்றுள்ளன. மாநாட்டை குன்றக்குடி அடிகளார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாநாட்டு நுழைவாயிலை அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு திறந்து வைத்தனர். கண்காட்சி அரங்கம் முன் அமைக்கப்பட்டிருந்த, 100 அடி கொடிக்கம்பத்தில் முருகன் மாநாட்டுக் கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றினார்.
சீர்காழி சிவசிதம்பரம் முருகன் பாடலை பாட, முருகன் பக்தி கோஷங்கள் இடையே மாநாடு துவங்கியது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று துவக்கவுரையாற்றினார். மாநாட்டு சிறப்பு மலரை அமைச்சர் பெரியசாமி வெளியிட, நீதிபதி சுப்ரமணியன் பெற்றுக்கொண்டார். இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான், லண்டன் துணை மேயர் பரம்நந்தா, மலேஷிய முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி, சிவ ஞானம், வேல்முருகன். திருவாவடுதுறை, குன்றக்குடி, பேரூர், செங்கோல், சிரவை, திருப்பா திரிப்புலியூர், தருமபுரம், மதுரை, பொம்மபுரம், திருப்பனந்தாள், சூரியனார்கோவில், வேளாக்குறிச்சி ஆதீனங்கள், எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., செந்தில்குமார், சுற்றுலா பண்பாடு அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கேற்ற ஆதீனங்கள், நீதிபதிகள், அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.