சூரியனார் கோவிலில் மகாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
கும்பகோணம்: சூரியனார்கோவில் சிவசூரியபெருமானுக்கு நடந்த மகாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கென்றே அமைந்துள்ள சிறப்பு பெற்ற தலம். இங்கு சூரியபெருமானுக்கு ஒவ்வொரு தமிழ்மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை காலை சிற ப்பு ஹோமத்துடன் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று கார்த்திகை மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை மகாபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. உற்சவர் உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின் கடங்கள் எடுத்து வரப்பட்டு மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்பலங்காரம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. மகாபிஷேகத்தில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை மீனாட்சிசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று முன்னிலை வகித்தார். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்திருந்தனர்.