நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில் முப்பெரும் விழா
ADDED :454 days ago
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவிலில் முப்பெரும் விழா நடந்தது.
இக்கோவிலின் இரண்டாம் ஆண்டு விழா, சிவன், பார்வதி, வர சித்தி விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு புதிதாக செய்யப்பட்ட வெள்ளி கவசங்கள் சாற்றும் விழா, வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ விழா ஆகியன நடந்தன. விழாவை ஒட்டி காமாட்சியம்மன் ஆலயத்தில் இருந்து கைலாய வாத்தியத்துடன் பால்குடம், முளைப்பாரி புறப்பாடு தொடர்ந்து வரசித்தி விநாயகருக்கு, 108 குடம் பாலாபிஷேகம், மூலவருக்கு மகா அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் நடந்தன. விழாவை ஒட்டி நடந்த அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.