உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சபேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி தேர்டிசம்பர் 3ம் தேதி கரிக்கோலம்!

கச்சபேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி தேர்டிசம்பர் 3ம் தேதி கரிக்கோலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளித் தேர் உருவாகி வருகிறது. அடுத்த மாதம் மூன்றாம் தேதி
கரிக்கோலம் (வெள்ளோட்டம்) நடைபெற உள்ளது.காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் முக்கியமானது, கச்சபேஸ்வரர் கோவில். திருமால் வழிபட்ட தலம். இக்கோவிலில் நன்கொடையாளர்கள் உதவியுடன், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளித் தேர் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. செம்பனார் கோவிலைச் சேர்ந்த முருகன் ஸ்தபதி தலைமையில், தேக்கு மரத்தில் தேர் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. தேர் முன் பொருத்துவதற்காக இரண்டு மரக்குதிரைகள், தேரோட்டும் பிரம்மா, தேரின் நான்கு முனைகளிலும் பொருத்த, சேடி பொம்மைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தேர் 21 அடி உயரம், 8 அடி அகலம் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. தேரின் அடிப்பாகத்தை சுற்றி, சிவபெருமானின் திருவிளையாடல் சிற்பங்கள் இடம் பெற உள்ளன. தேர் மீது, 200 கிலோ வெள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. தேர் நிறுத்த மண்டபம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான் கூறுகையில் நன்கொடையாளர்கள் உதவியுடன், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளித் தேர் உருவாக்கப்படுகிறது. இதன் கரிக்கோலம் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெறும். அதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !