உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் திருப்பதி திருவேங்கிட சுவாமி கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம்

தென் திருப்பதி திருவேங்கிட சுவாமி கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம்

மேட்டுப்பாளையம் ; தென் திருப்பதி திருவேங்கிட சுவாமி ஆலையத்தில் நவராத்திரி  பிரமோற்சவத்தை ஒட்டி   திருத்தேரோட்டம்  நடைபெற்றது. கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் தென்திருப்பதி திருவேங்கிட சுவாமி ஶ்ரீவாரி ஆலயத்தில்  ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி பிரமோற்சவ விழா கடந்த 3 ம் தேதி  துவங்கியது. இதன் பின்னர் தினசரி வேத மந்திரங்கள் முழங்க கோவில் வேத  விற்பன்னர்கள் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து ஶ்ரீதேவி பூதேவியுடன் திருவேங்கிட சுவாமி அன்னப்பட்சி வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், கல்ப விருட்ச வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்   நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் ஶ்ரீதேவி பூதேவி தாயாருடன்  மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து மேள தாளத்துடன் திருத்தேரினை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர் கோவில் முன்பு இருந்து துவங்கி கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக திருத்தேர் பவனி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !