பழநி முருகன் கோயில் ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடந்தது
பழநி; பழநி கோயில் ராஜகோபுரம் சேதமடைந்ததை அடுத்து கோயிலில் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று இலகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழநி கோயில் ராஜகோபுரம், கருவறை கும்பாபிஷேகம் 2023, ஜன., 27 ல் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜகோபுரத்தின் வலதுபுற சுதை சிற்பமான டகோரம் சேதமடைந்தது. இதனை அடுத்து பழநி மலை கோயில் நிர்வாகம் முறைப்படி ஹிந்து அறநிலையத்துறையின் அனுமதி பெற்று ராஜகோபுரத்திற்கு சாரம் அமைக்கப்பட்டது. அதன் பின் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது. சுதை சிற்பம் ஸ்தபதி மூலம் சரி செய்யப்பட்டது. அதிகாலை ஐந்து நிலை ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமடைந்த கோரம் புனரமைப்பு செய்யப்பட்டது. யாக பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர், கோயில் உட்பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது. அதன்பின் ஐந்து நிலை ராஜகோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அதிகாலை 5:40 மணிக்கு, அமிர்தலிங்க குருக்கள் செல்வ சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் இலகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இலகு கும்பாபிஷேகத்திற்கு பின் மூலவர், உற்ஸவருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிகள் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.