நந்தியபெருமான் கோவிலுக்கு தங்க ரதத்தில் எழுந்தருளிய மணக்குள விநாயகர்
புதுச்சேரி; நாடு சண்முக வேலாயுத சுவாமிகள் குருபூஜையை யொட்டி கோவிலுக்கு மர தங்க ரதத்தில் வந்து மணக்குள விநாயகர் எழுந்தருளினார்.
புதுச்சேரி வெள்ளாழ வீதியில் உள்ள நந்தியபெருமான் கோவிலில், அவரது பாதத்தின் கீழ் நாடு சண்முக வேலாயுத சுவாமிகளின் ஜீவசமாதி அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலில் இருந்து 1989 ஆம் ஆண்டு, மர தங்க ரதம் புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை தினத்தன்று மணக்குள விநாயகர் மர தங்க ரத தேரில் இந்த கோவிலில் எழுந்தருள்வார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த தங்க ரதம் வீதி உலா வரும். நேற்று 116 ஆவது குருபூஜை விழாவை தொடர்ந்து காந்தி வீதி கங்கை விநாயகர் மற்றும் மணக்குள விநாயகர் கோவிலில் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இரவு ரதத்தில் வீதி உலாவாக வந்த மணக்குள விநாயகர் 34ம் ஆண்டாக இக் கோவிலில் எழுந்தருளினார். அவரை நந்திய பெருமான் மற்றும் பக்தர்கள் வணங்கி வரவேற்றனர்.