கும்பகோணத்தில் 1,000 ஆண்டு பழமையான நந்தி கற்சிலை கண்டெடுப்பு
ADDED :333 days ago
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தின், தென்புறத்தில் தேங்கும் மழைநீரை அகற்றும் விதமாக வடிகால் அமைக்க, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக நேற்று காலை பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, 3 அடி ஆழத்தில், இரண்டரை அடிநீளம் கொண்ட சிற்ப வேலைபாடுகளுடன் கருங்கல்லில் செதுக்கப்பட்ட நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.
செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: கருமை நிற கருங்கல்லில் சோழர் கால வேலைப்பாடுகளுடன் நந்தி சிலை உள்ளது. இந்த சிலை, 1,000 ஆண்டுகள் பழமையான சிலையாக தெரிகிறது. நந்தி சிலையை வருவாய் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அதன்பின், முழுமையான தகவல் கிடைக்கும். இவ்வாறு கூறினார்.