1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாகூர் மூலநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
பாகூர்; பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், கார்த்திகை மாத நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்காபிஷேகம் நடந்தது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கார்த்திகை மாத 4வது சோமவாரத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி, இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதனையொட்டி, காலை 6:00 மணிக்கு பால விநாயகர், வேதாம்பிகையம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு யாகசாலை பூஜையும், 10.30 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம், 12.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக, 1008 சங்குகளையும் லிங்க வடிவத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.