உலக அமைதி வேண்டி 2025 அகல் விளக்குகள் ஏற்றி ஆரோவில்லில் வழிபாடு
வானுார்; ஆரோவில்லில் தீப திருநாளையொட்டியும், உலக அமைதி வேண்டியும் நேற்று நடந்த அகல் விளக்கு தீப வழிபாட்டில் ஏராளமான வெளிநாட்டினர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் மோகன கலாசார மையம் அமைந்துள்ளது. இங்கு உலக அமைதி வேண்டியும், தீப திருநாளை முன்னிட்டும் நேற்று 2025 அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். வழிபாட்டில், 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், உள்ளூர் வாசிகள் பங்கேற்று தியானத்தில் ஈடுப்பட்டனர். இது குறித்து மோகன கலாசார மைய நிர்வாகி பாலசுந்தரம் கூறுகையில், ‘உலகில் அமைதி, ஒற்றுமை நிலவ வேண்டும். அனைவருக்கும் நன்மை நடக்க வேண்டும் என்பதற்காகவும், வரும் 2025ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி, 2025 அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது’ என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டினர் கூறுகையில், ‘தீப வழிபாடு எங்களுக்கு ஆன்மிக ரீதியான ஒரு புதிய அனுபவத்தையும், மனதில் அமைதியான நிலையை ஏற்படுத்தியுள்ளது’ என்றனர்.