உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை கோயிலில் அஷ்டமி சப்பர விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

மானாமதுரை கோயிலில் அஷ்டமி சப்பர விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் நடைபெற்ற அஷ்டமி சப்பர வீதி உலாவில் சிவபெருமான் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் வருடம் தோறும் மார்கழி மாதம் வரும் அஷ்டமி திதியில் உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு படியளக்கும் விதமாக சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளி வீதிவுலா செல்வது வழக்கம். இன்று மார்கழி அஷ்டமி திதியை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கும், அம்மனுக்கும் 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடனும், ஆனந்தவல்லி அம்மனும் ரிஷப வாகனத்தில் கொடி மரத்திற்கு முன்பாக எழுந்தருளினர். பின்னர் தீபாராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு முன்பாக மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தனித்தனி சப்பரங்களுக்கு சோமநாதர் சுவாமியும், ஆனந்தவல்லி அம்மனும் எழுந்தருளினர். பின்னர் ஏராளமான பக்தர்கள் வடத்தை பிடித்து சப்பரத்தை இழுத்துச் சென்றனர். அப்போது ஏராளமானோர் சப்பரங்களுக்கு முன்பும்,பின்பும் உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு சிவபெருமான் படியளக்கும் விதமாக அரிசி,நெற்கதிர்கள்,தானியங்கள் உள்ளிட்டவற்றை தூவியபடி சென்றனர். சப்பரங்கள் பாகபத் அக்ரஹாரம்,கனரா வங்கி,மெயின் பஜார்,தேரோடும் வீதிகள் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன், சிவாச்சாரியார்கள் ராஜேஷ்,குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !