ராமேஸ்வரம் கோவிலில் பாகுபலி மாடுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தர்
ராமநாதபுரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தின் பக்தர்கள் குழு ஒன்று தலைமுறை தலைமுறையாக 3 தலைமுறையாக பின்பற்றி வரும் முறையில் வீட்டில் வளர்க்கும் பாகுபலி மாடுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவரது குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக தாங்கள் வளர்க்கும் மாட்டுடன் ஆண்டின் இறுதி மாதத்தில் சுமார் 1400 கி மீ பயணம் செய்து தமிழ்நாட்டில் உள்ள சுமார் 30 கோவில்களில் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ராஜூ மூன்றாவது தலைமுறையாக மாட்டுடன் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் உள்ள 30 கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து புறப்பட்ட ராஜு மற்றும் அவரின் உறவினர்கள் 10 பேர் கொண்ட குழு மற்றும் அவர் வளர்க்கும் மாட்டுடன் இந்தாண்டுக்கான கோவில் யாத்திரையை சரக்கு லாரியில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு ராமநாதசுவாமி தரிசனம் செய்வதற்காக 24 ந் தேதி ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.
பின் மாட்டின் உடல் முழுவதும் மணிகளை கட்டி அலங்கரித்துடன் நெத்தி பொட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியால் ஆன சாமி திருவுருவம் பொறிக்கப்பட்ட டாலர்களைக் கொண்டு அலங்கரித்து கயிறை பிடித்தவாரு மாட்டை சுற்றி இரண்டு பேர் இரும்பு மேளம் தட்டியவாறு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்தனர். பின்னர் ராமேஸ்வரம் திருக்கோயில் நுழைவாயிலில் மாட்டை கட்டி விட்டு திருக்கோயிலுக்குள் சென்று ஆந்திர பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைத்து கோயில்களும் தலைமுறை தலைமுறையாக தாங்கள் வளர்க்கும் மாட்டை கோயிலின் நுழைவாயில் நிறுத்தி வைத்துவிட்டு சாமி கும்பிட்டனர். இந்த மாடு பாகுபலி படத்தில் வருவது போல் மிகப்பெரிய அளவில் வித்தியாசமாக இருந்ததால் அந்த மாட்டை ராமேஸ்வரம் வந்திருந்த வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்ததுடன் அதை தொட்டு வணங்கினர். ஆந்திரா மாநில பக்தர் ராஜூ குழுவினர் ராமேஸ்வரத்தில் தரிசனத்தை முடித்து விட்டு வரும் 30 ம் தேதிக்குள் கன்னியாகுமரி, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில் மாட்டுடன் சுவாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்ப உள்ளனர்.