உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 7ம் நுாற்றாண்டை சார்ந்த விநாயகர் புடைப்பு சிற்பம் கண்டுபிடுப்பு

7ம் நுாற்றாண்டை சார்ந்த விநாயகர் புடைப்பு சிற்பம் கண்டுபிடுப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், பல்லவர் கால எழுத்துப் பொறிப்புடன் கூடிய விநாயகர் புடைப்புச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஏதாநெமிலி கிராமத்தில் பழங்கால சிற்பம் இருப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த சிபிச்சக்கரவர்த்தி அளித்த தகவலின்படி, விழுப்புரம் வரலாற்று ஆய்வு மைய பேராசிரியர் ரமேஷ், தமிழாசிரியர் கமலக்கண்ணன் மற்றும் மாணவர்கள் குழுவினர் நேரில் ஆய்வு செய்து வந்தனர்.அது குறித்து, பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது: ஏதாநெமிலி ஏரிக்கரை ஒட்டியுள்ள புதர் மண்டிக் கிடந்த தோப்பில், பழமையான பல்லவர் கால விநாயகர் சிற்பம் கண்டறியப்பட்டது. விநாயகர் சிற்பம் 89 செ.மீ உயரமும், 85 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. விநாயகர், பத்மாசனத்தில் இரு கால்களையும் மடித்த நிலையில் உள்ளார். அவரது நான்கு கரங்களில் உள்ள ஆயுதங்களை சரியாக அறிய முடியவில்லை. விநாயகரின் தலையை அழகிய மகுடம் அணி செய்கிறது. நெற்றியில் ஒரு கண் காட்டப்பட்டு முக்கண் விநாயகராகக் காட்சி தருகிறார். இடப்புறம் உள்ள தந்தம் உடைந்தும், தும்பிக்கை இடது புறமாக வளைந்தும், இடம்புரி விநாயகராக காட்சியளிக்கிறார். வயிற்றில், வயிற்றுக்கட்டு காணப்படுகிறது. வலது புறத்தில் கீழிருந்து மேலாக எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அக்கல்வெட்டின் வாசகமானது, "உள்களம் கள்ளர் உழுத்திர சயியாரு கொட்டிவிச படி(மம்)". அதாவது, உள்களத்தைச் சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாரு என்பவர், இந்த விநாயகர் சிற்பத்தைச் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது. இதில் காணப்படும் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு, அதன் காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என முதுபெரும் கல்வெட்டு அறிஞர் ராசகோபால் தெரிவித்தார். விநாயகருக்கு பக்கத்தில் உடைந்த ஆவுடையார் உள்ளது. இதனால், பல்லவர் காலத்தில் ஒரு சிவாலயம் இருந்து, அழிந்திருக்கலாம். தற்போது அதில் விநாயகர் சிற்பம் மட்டுமே எஞ்சி காணப்படுகிறது என்று தெரிவித்தார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !