சபரிமலையில் மண்டல மகர விளக்கு காலம் நிறைவு; நடை அடைப்பு.. 52 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை; 61 நாட்கள் நடைபெற்ற மண்டல மகர விளக்கு கால சீசன் நிறைவு பெற்று சபரிமலை நடை இன்று காலை அடைக்கப்பட்டது.
சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நவம்பர் 15 மாலை நடை திறக்கப்பட்டு, டிச., 26 இரவு அடைக்கப்பட்டது. மூன்று நாள் இடைவெளிக்கு பின்னர் 30 மாலை நடைதிறந்து மகர விளக்கு கால சீசன் தொடங்கியது. ஜன., 14-ல் மகரஜோதி விழா நடைபெற்றது. கடந்த 18-ல் நெய் அபிஷேகம் நிறைவு பெற்றது. நேற்று மாளிகை புறம் மணிமண்டபம் முன்பு குருதி பூஜை நடைபெற்றது. இன்று காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. 6:30 - க்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி ராஜராஜ வர்மா ஸ்ரீ கோயில் முன் வந்ததும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஐயப்பன் விக்ரகத்தில் திருநீறு பூசி தவக்கோலத்தில் அமர்த்தி நடை அடைத்தார். பின்னர் கோயில் சாவியை அவர் பந்தள மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைத்து பண முடிப்பையும் கொடுத்தார். 18 படிக்கு கீழே வந்ததும் ராஜராஜ வர்மா கோயில் சாவி மற்றும் பணத்தை சபரிமலை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைத்து வரும் காலங்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் பந்தளம் புறப்பட்டார். இந்த மண்டல மகர விளக்கு காலம் பெரிய அளவில் புகார்கள் எதுவும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. சுமார் 52 லட்சம் பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளனர். இனி மாசி மாத பூஜை களுக்காக பிப்., 12 -ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.