உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல் அறுவடை நெல்லை அழகர் கோவிலுக்கு நெல் கோட்டை கட்டிய முஸ்லிம்

முதல் அறுவடை நெல்லை அழகர் கோவிலுக்கு நெல் கோட்டை கட்டிய முஸ்லிம்

சோழவந்தான்; சோழவந்தான் அருகே தேனுாரில் இருந்து முதல் அறுவடை நெல்லை பாரம்பரியமாக அழகர் கோவிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அழகரின் சொந்த ஊரான தேனுரரிலிருந்து ஆண்டுதோறும் முதன்முறையாக அறுவடை செய்யும் நெல்லை அழகர் கோவிலுக்கு வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டும் முதல் அறுவடையின் ஒரு பங்கை கையாலேயே அறுவடை செய்து களத்தில் கதிரடித்து, அதனை அலங்கரித்து தேனுார் மலையன் சாவடிக்கு கொண்டு சென்றனர். மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரின் நிலங்களில் இருந்தும் அறுவடை செய்து அழகருக்கு வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பீர்முகமது நிலத்திலிருந்து அறுவடை செய்து கிராம கரைகாரர்கள் முன்னிலையில் நெற்கதிரை அறுவடை செய்து அழகர் கோவிலுக்கு செலுத்தும் முதல் படி நெல்லை வைக்கோல் பிரியால் கட்டி தீபாரதனை செய்து வழிபட்டனர். பின்னர் கள்ளழகர் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.பீர்முகமது கூறுகையில்: இந்த கோட்டை கட்டும் நிகழ்வுக்கு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்களும் கோட்டை கட்டி உள்ளனர். அது போல இன்று நானும் அழகர் கோவிலுக்கு முதல் அறுவடை நெல்லை கோட்டையாக கட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !