சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோவிலுடன் இணைந்தது பழையனூர் சாலையில் அமைந்துள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவில். இக்கோவிலில், 2004ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 20 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தாண்டு கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். திருத்தணி கோவில் நிர்வாகம் கும்பாபிஷேக விழாவை நடத்த ஒப்புதல் வழங்கிய நிலையில், நாளை முதல், கோவில் திருப்பணி துவங்க உள்ளதால், இன்று பாலாலயம் நடந்தது. இதையொட்டி, இன்று காலை 9:30 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. இதையடுத்து, காலை 10:00 மணிக்கு மூலவர் அத்தி மரத்திலான பலகையில் வரையப்பட்ட மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பாலாலயம் நடந்தது. சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேக விழா வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடந்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்விழாவில், திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, திருவாலங்காடு ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் சுப்பிரமணியம் உட்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.